கோவில்களை விடுவிக்க மிஸ்டு கால் எதற்கு? – சத்குரு விளக்கம்

தமிழகம்

கோவில்களை விடுவிக்க மிஸ்டு கால் எதற்கு? – சத்குரு விளக்கம்

கோவில்களை விடுவிக்க மிஸ்டு கால் எதற்கு? – சத்குரு விளக்கம்

கோவில் அடிமை நிறுத்து இயக்கத்திற்கு கொடுக்கப்படும் மிஸ்ட் கால்கள் மூலம் மக்களின் விருப்பத்தை அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க முடியும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறினார்.

கோவில்அடிமைநிறுத்து என்ற இயக்கம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வு சென்னையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் இன்று (மார்ச் 13) நடைபெற்றது. இதில் பிரபல திரைப்பட நடிகர் சந்தானம் அவர்கள் பங்கேற்று சத்குருவுடன் கலந்துரையாடினர்.

அப்போது, சமூக வலைத்தளங்கள் மூலம் தன்னிடம் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் முன் வைத்தார். அப்போது, “லாக்டவுன் காலத்தில் வாடிகன் சிட்டியில் இருந்து வெங்கடாஜலதி கோவில் வரை அனைத்தையும் மூடிவிட்டார்கள். நாட்டில் போதும்டா சாமி என சொல்லும் அளவுக்கு பிரச்சினைகள் உள்ளன. இந்த சமயத்தில் கோவில்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏன் கையில் எடுக்கிறீர்கள். இதற்கு பதில் ஏழைகளுக்கு உணவும் கல்வியும் கொடுப்பது குறித்து பேசலாமே? ” என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த சத்குரு, “தமிழ் கலாச்சாரம் நேற்று பிறந்தது இல்லை. ஆயிரகணக்கான ஆண்டுகளாக இருந்து வருகிறது. சிலர் இதை 30 – 40 வருடங்களுக்கு முன்பு தான் உருவானது போல நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னர்கள் பக்தியில் ஊறிய மனிதர்களாக இருந்தனர். இங்கு முதலில் கோவில்களை கட்டிய பின்னர் தான் ஊர், நகரங்களை கட்டமைத்தனர். கிரானைட் கற்களை வைத்து தமிழக கோவில்களில் கட்டப்பட்ட அளவிற்கு வேறெங்கும் கோவில்கள் கட்டப்படவில்லை. கிரேன் போன்ற எந்த இயந்திர வசதிகளும் இல்லாத காலத்தில் இவ்வளவு மகத்தான கோவில்களை கட்டி இருக்கிறார்கள். நாம் கற்களை நகற்ற கிரேன் பயன்படுத்துகிறோம், வெறும் கரங்களினால் இவ்வளவு பிரமாண்ட கோவில்களை கட்டி அவர்களே வணங்கத்தக்கவர்கள் தான்.

சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை உலகிலேயே மிக வளமான நாடாக நம் நாடு இருந்தது. யூரோப், பிரென்ச், போர்ச்சுக்கிஸ் முதல் அனைத்து நாடுகளிலும் இருந்து இந்தியா நோக்கி வந்ததற்கு காரணம் இங்கு இருந்த வளமே காரணமாக இருந்தது. முதலில் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்வென்றால் ஒரு கலாச்சாரம் வெற்றிரமாக இருக்க வேண்டுமென்றால், மக்கள் தெம்பாக இருக்க வேண்டும். ஒருவர் பக்தராக இருந்தால் அவர் எப்போதும் தெம்பாகவும், உற்சாகமாகவும் இருப்பார்.

இப்போது நாட்டில் கோவில்களை விட சாராய கடைகளை முக்கியமானதாக வைத்துள்ளீர்களே? இது தான் நம் கலாச்சாரத்திற்கும் மாநில முன்னேற்றத்திற்கும் வழியா? இப்போது, நம் நாட்டில் 50 சதவீதம் பேர் 30 வயதிற்கு கீழ் உள்ளார்கள். இந்த தலைமுறையில் கலாச்சாரத்தை மேம்படுத்தவிட்டால் எப்போது மேம்படுத்த போகிறீர்கள்?மக்களிடம் தெம்பையும் நம்பிக்கையையும் உருவாக்க கோவில்கள் வேண்டும். 1947-ல் நம் மாநிலத்தின் மக்கள் தொகை ஒன்றரை கோடி இருந்தது. இப்போது 7 கோடியை தாண்டிவிட்டது. மக்கள் தொகைக்கு ஏற்ப எத்தனை புதிய கோவில்களை நீங்கள் கட்டியுள்ளீர்கள். நாம் புதிதாக கோவில்களை கட்டாவிட்டால் கூட பரவாயில்லை. ஏற்கனவே இருக்கும் கோவில்களை கூட ஒழுங்காக பராமரிக்க வேண்டாமா?” என்றார்.

கோவில்களை மீட்டு என்ன மாதிரி செய்ய முடியும் என்று சந்தானம் எழுப்பிய கேள்விக்கு, “முதலில் கோவில்கள மன்னர்கள் கைகளில் இருந்தது. பின்னர் சமுகத்தில் சிலரின் கைகளில் இருந்தது. பின்னர் கிழக்கிந்திய கம்பெனி தான் அவற்றை கைப்பற்றியது. இன்று நான் கோவில்கள் என்று சொன்னால் வருமானம் குறித்து பேசுகிறார்கள். யார் கைகளில் கொடுக்க வேண்டும் என்றால் 87% மக்கள் தொகை கொண்ட சமுதாயத்தில் 2 0 – 25 திறமையான நேர்மையான மக்கள் இல்லை என்று அரசியல்வாதிகள், ஊடகத்தினர் முதற்கொண்டு அனைவரும் சொல்லி விடலாமே. எப்படி நடத்தலாம் என்று கேட்டால் குருத்வாராக்களை பாருங்கள் 8 குருத்வாரகளை கொண்டு 1௦௦௦ கோடிக்கு பட்ஜெட் போடுகிறார்கள். இது போன்ற பல உதாரணங்களை நாம் சொல்ல முடியும்.

கோவில்கள் குறித்து இப்போது ஏன் பேச வேண்டும் அரசியல் நோக்கங்கள் ஏதாவது இருக்கின்றதா என்று கேள்விக்கு, ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் தான் நாயகர்கள் அவர்கள் தனக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். ஒரு அரசாங்கம் அமைந்த பின்னர் போராட்டங்கள் செய்வதோ, மறியல் செய்வதோ பலன் அளிக்காது. தற்போது தேர்தல் வருகிறது அதனால் நான் 5 கோரிக்கைகளை கூறி உள்ளேன், அதை நிறைவேற்ற உறுதி அளிப்பவர்களுக்கே எனது ஒட்டு. அதில் இந்த கோவில்கள் குறித்து மட்டுமே பலரும் பேசுகிறார்கள்.

இந்த கோவில்கள் குறித்து பேசும் போது கோவில்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கத்தின் கீழ் போய் விடும் என்ற சொல்கிறார்கள் என்ற கேள்விக்கு, சத்குரு இது முழுவதும் உண்மை இல்லை. இந்த சாதிகள் எல்லாம் தொழில் அடிப்படையில் உருவானவை, இன்று நீங்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்றால் அதற்கான பயிற்சி நிறுவனங்கள் இருக்கின்றன. அதே போல நெஞ்சில் பக்தியும் ஆர்வமும் இருக்க கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும் என்று கூறினார்.

இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார். கோவில்களை அரசிடம் இருந்து எடுத்து பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள் யார் அந்த பக்தர்கள், அப்படி செய்யும் பொது அதில் வெளிப்படைதன்மை இருக்குமா என்ற கேள்விக்கு நம் நாட்டில் எல்லாவற்றிற்கும் சட்டங்கள் இருக்கிறது. தொலைகாட்சிகளுக்கு என்று ஒரு சட்டம் இருக்கிறது. ஊடகங்களுக்கு என்று ஒரு சட்டம் இருக்கின்றது. ஒரு நாள் நீங்கள் தவறாக செய்தி போட்டால் அதற்காக உங்கள் ஊடகத்தையே மூடி விடலாமா? அதற்கான சட்ட வழிமுறைகள் இருக்கின்றது.

அதேபோல் கோவில்களை நிர்வகிப்பதற்கும் முறையான சட்டதிட்டங்களுடன் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அதில் பல்வேறுதரப்பட்ட மக்கள் இடம் பெற செய்ய வேண்டும். சாதி மதம் பார்க்காமல் இருக்கும் மக்களை அதில் இருக்குமாறு செய்ய வேண்டும். இந்த அமைப்பை கண்காணிக்க இரண்டு நீதிபதிகளை நியமனம் செய்யலாம். நாளையே கோவில்கள் முழுவதையும் ஒப்படைத்து விட முடியும் என்று நான் சொல்லவில்லை, இதற்கு 2 அல்லது 5 அல்லது 10 ஆண்டுகள் கூட ஆகலாம். நான் சொல்வது முதலில் கோவில்களை அரசு கட்டுபாட்டில் இருந்து விடுவிக்கும் நோக்கத்தை கட்சிகள் காட்ட வேண்டும்.

கோவில் அடிமை நிறுத்து இயக்கத்திற்காக மிஸ்டு கால் கொடுக்க சொல்லி கேட்டு இருக்கிறீர்கள் இதனால் என்ன நடக்கும் என்ற கேள்விக்கு, “மக்களின் விருப்பத்தை வெளிபடுத்தும் ஒரு வழி தான் இந்த மிஸ்ட் கால். தமிழ்நாட்டில் 7 கோடி பேர் உள்ளனர். அதில் சில கோடி மக்கள் மிஸ்டு கால் கொடுத்தாலே அதை அரசியல் கட்சிகள் கவனிக்கும். அதற்கு தான் இந்த மிஸ்ட் கால் பிரச்சாரம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave your comments here...