பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு.!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் போதும், 5 நாள் பூஜைக்காக திறக்கப்படுவது வழக்கம். அதே போல் பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
மாத பூஜையை முன்னிட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாத பூஜையின் தொடர்ச்சியாக வரும் 19-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது.
அன்றைய தினம் காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைப்பார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28 – ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். அன்று இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும். மாத பூஜை மற்றும் விழா நாட்களில் 15-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வர வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...