சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் தங்கம் பறிமுதல் – ஒருவர் கைது
சென்னை விமான நிலையத்தில் ரூ. 35.7 லட்சம் மதிப்பில் 730 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், மேலும் இதுதொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
துபாயிலிருந்து வரும் விமானம் ஒன்றில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு கடத்தப்படுவதாக உளவுப் பிரிவினரிடமிருந்து கிடைத்தத் தகவலின் அடிப்படையில் சனிக்கிழமையன்று துபாயிலிருந்து சென்னை வந்த இண்டிகோ 6ஈ-066 என்ற விமானம் சோதனையிடப்பட்டது.சோதனையின்போது ஓர் இருக்கையின் கீழ் உயிர்க்கவச ஆடை வைத்திருக்கும் பையின் உள்ளே சோப்புப் பெட்டி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தப் பெட்டியைத் திறந்தபோது கருப்புநிற டேப்பால் சுற்றப்பட்ட 821 கிராம் தங்கப் பசை அடங்கிய 3 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.ரூ. 35.7 லட்சம் மதிப்பில் 730 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. வெளியேறும் பாதை வழியாக அவசரமாக சென்று கொண்டிருந்த ஓர் பயணி தடுத்து நிறுத்தப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த யாசர் அராபத் (22) என்ற அந்தப் பயணி தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்த இருக்கையில் பயணம் செய்தது தெரியவந்தது.அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயத்தின் காரணமாக இருக்கையின் கீழ் தாம் தங்கத்தை மறைத்து வைத்ததை அவர் ஒப்புக்கொண்டார்.ரூ. 35.7 லட்சம் மதிப்பில் 730 கிராம் தங்கம், சுங்கச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டதோடு அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...