புதிய நோய்களை எதிர்த்து போராட தயாராக இருங்கள்: விஞ்ஞானிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுறுத்தல்
விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை கொவிட்-19 தொற்று உணர்த்தியுள்ளதால், புதிதாக உருவாகும் நோய்களை எதிர்த்து போராட, விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் தயாராக இருக்க வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
‘குளோபல் பயோ இந்தியா-2021’ நிறைவு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பேசியதாவது: சமீபகாலமாக பல தொழில் பிரிவுகளில் உயிரி தொழில்நுட்பம் முக்கியமான பிரிவாக உருவெடுத்துள்ளது. தொழில்முனைவோர், புதுமை, உள்ளூர் திறமைகளின் வளர்ச்சி மற்றும் உயர் மதிப்பு அடிப்படையிலான பராமரிப்பை நிரூபித்தல் ஆகிய நான்கு முக்கிய நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்தியா, உயிரி தொழில்நுட்ப துறையிலிருந்து, உயிரி பொருளாதாரத்திற்கு மாறுவதற்கான தனித்துவமான நிலையில் உள்ளது.
கொவிட் நெருக்கடியை குறைக்க, பரிசோதனை உபகரணங்கள், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பு, புதிய பாதுகாப்பு சாதனங்கள், பரிசோதனை திறனை அதிகரித்தது என உயிரி தொழில்நுட்ப துறையின் அயராத உழைப்பு பாராட்டத்தக்கது.
கொவிட் தொற்றை எதிர்த்து போராடுவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உலகம் ஒரே குடும்பம் என்ற உணர்வுடனும், ‘பகிர்வோம், கவனிப்போம்’ என்ற பழங்கால தத்துவத்துடனும் கொவிட்-19 தடுப்பூசிகளை பலநாடுகளுக்கு இந்தியா விநியோகிக்கிறது.
இந்தியாவின் செயல்பாடுகள், உலக சுகாதார நிறுவனத்தின் பாராட்டை பெற்றுள்ளது. தடுப்பூசிகள் விநியோகிப்பதற்காக, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குனர் நன்றி தெரிவித்துள்ளார். உயிரி தொழில் நுட்ப துறை அதிக ஆற்றல் படைத்தது. அதனால் சுற்றுச்சூழல் தொழில்முனைவோர்களுக்கான ஒழுங்குமுறை அனுமதியை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இந்த முயற்சிகளால், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள், இணையதளங்கள் ஆகியவை தொற்றுக்கு இடையிலும் கடந்தாண்டு பல மடங்கு அதிகரித்தது. 2025 ஆம் ஆண்டுக்குள் 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான தொழில் துறையாக மாறவும், புதுமை கண்டுபிடிப்பு அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு தனது பங்களிப்பை அளிக்கவும் உயிரி தொழில்நுட்ப துறை, இலக்கு நிர்ணயித்துள்ளது. இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கவும், திறனை அதிகரிக்கவும் கல்வி நிறுவனங்களும், தொழில்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.
தற்சார்பு இந்தியா முயற்சிகள், உயிரி தொழில்நுட்பம் என்ற நிலையிலிருந்து பயோ பொருளாதாரம் என்ற முன்னுதாரண மாற்றத்தை அடைய உதவும். புதியக் கொள்கை நடவடிக்கைகள், உயிரி-பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தும். வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளின் பிரச்னைகளை தீர்க்க உயிரி தொழில்நுட்ப துறையின் திறனை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கோட்டக் மகேந்திரா வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரேணு ஸ்வரூப் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Leave your comments here...