மாற்றுத்திறனாளி இளைஞருக்கு சொந்த செலவில் வாகனம் வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மதுரை மாவட்ட ஆட்சியர்.!
மதுரை முடக்காத்தான் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரி என்பவரது மகனான பழனிகுமார் என்ற மாற்றுத்திறனாளி மற்றும் மனநலம் குன்றிய இளைஞரை அவரது தாயார் கடந்த 22ஆண்டுகளாக பராமரித்து வளர்த்துவருகிறார். அவரால் நடக்க முடியாத சூழலில் தனது மகனை வெளியில் அழைத்துசெல்லும் போது இடுப்பில் சுமந்து திரிவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மனு அளித்திருந்தார்.
அந்த மனுவில் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக தனது மகனை அழைத்துசெல்ல வாகனம் வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில் உதவிகள் கிடைக்கவில்லை என கூறியிருந்தார். இந்நிலையில் புகாரை பெற்றுகொண்ட மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தனது உதவியாளர் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் புதிய வடிவமைப்பில் இளைஞர் அமரகூடிய வகையில் இருக்கையுடன் கூடிய இரு சக்கர வாகனத்தை வழங்கினார்.
இதையடுத்து மாற்றுத்திறனாளி இளைஞரை வாகனத்தில் அமரவைத்து இளைஞரின் கால்களை தனது இடுப்பில் பிடித்தவாறு மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அழைத்துசென்றார். அப்போது மாற்றுதிறனாளி இளைஞர் தனது சிரிப்பின் மூலமாக எல்லையில்லா மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார். மாற்றுத்திறனாளி இளைஞரின் தாயாரின் 22ஆண்டு சுமைக்கு ஓய்வுளித்து உதவிய மாவட்ட ஆட்சியரின் உதவிபுரியும் செயல் அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
ஏற்கனவே இதே மாவட்ட ஆட்சியர் வாடகை வீட்டிற்கான முன்தொகையை தரமறுப்பதாக எழுந்த குற்றச்சாட்டில் மூதாட்டி ஒருவரை தனது காரிலயே அழைத்து சென்று பண உதவி செய்து புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்தார் என்பது கரூரில் பணிபுரிந்தபோது பணிஓய்வுபெற்ற தனது ஓட்டுனரை தானே காரை ஓட்டியபடி வீட்டிற்கு அழைத்துசென்றதும் நினைவுகூறதக்கது.
செய்தி: Ravi Chandran
Leave your comments here...