துபாயிலிருந்து நுாதன முறையில் கடத்தி வரப்பட்ட 2.32 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் – ஒருவர் கைது
துபாயிலிருந்து நுாதன முறையில் கடத்தி வரப்பட்ட 2.32 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கடத்தல்காரர்கள் தங்கம் கடத்துவதற்கு புதிய முறையைக் கையாளுவதை, சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். துபாயிலிருந்து சர்வதேச விமானமாக வரும் விமானங்களில் தங்கத்தை மறைத்து வைத்து அதன் பிறகு அதே விமானம் இந்தியாவில் குவஹாத்தி போன்ற உள்நாட்டு நகரங்களுக்கு இடையே இயங்கும் விமானமாகப் பயணிக்கும் போது, அத்தகைய விமானத்தில் பயணிக்கும் பயணிகள் மூலமாக தங்கம் கடத்துவது, அதன் பின்னர் அதே விமானம் குவஹாத்தியில் இருந்து சென்னை மார்க்கத்தில் இயங்கும்போது அதை அங்கிருந்து பெற்றுக் கொள்வது என்ற விதத்தில் தங்கம் கடத்தப்படுவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இண்டிகோ விமானம் 6E 66 விமானத்தில் துபாயிலிருந்து தங்கம் கடத்தப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில், அந்த விமானத்தில் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சோதனையின்போது நீள் சதுர வடிவிலான, கனமான துண்டுகள், கருப்பு டேப் மூலம் ஒட்டப்பட்டு நூலால் கட்டப்பட்டு, உலோகத் துண்டுடன் இணைக்கப்பட்டு, விமான இருக்கை ஒன்றில், துளையுள்ள குழாய் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை வெட்டித் திறந்து பார்த்தபோது 10 தோலா எடை கொண்ட வெளிநாட்டு குறியீடுகள் கொண்ட 1.16 கிலோ எடை கொண்ட 57.1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 தங்கக் கட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.
Chennai Air Customs: In new modus 2.32 kg gold worth Rs.1.14 cr seized. 1.16 kg gold recvrd on rummaging flt 6E66 frm Dubai frm seat pipe & 1.16 kg gold from a pax returning to Chennai frm Guwahati by same aircraft on its domestic leg. Pax admitted role in both. Arrested. pic.twitter.com/GlgXelZzt6
— Chennai Customs (@ChennaiCustoms) February 6, 2021
இந்த விமானம் அதன் பிறகு உள்நாட்டு போக்குவரத்து விமானமாக விமானம் 6ஈ 627 என்று குவஹாத்தி புறப்பட்டு சென்றது. அதன் பிறகு விமானம் 6ஈ623 என்ற விமானமாக குவஹாத்தியிலிருந்து சென்னை திரும்பியது. முன்பு தங்கம் கைப்பற்றப்பட்ட அதே இருக்கையில் பயணம் செய்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முகமது கான் (வயது 56 ) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது உடலை சோதனையிட்டபோது, அவரிடமிருந்து நீள்சதுர வடிவமுள்ள கனமான 5 துண்டுகள் அவரது சட்டைக்கு அடியில் அவரது இடுப்புடன் இணைக்கப்பட்டிருந்த ஒரு துணிப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை வெட்டித் திறந்து பார்த்தபோது ஒவ்வொன்றும் 10 தோலா கொண்ட வெளி நாட்டு குறியீடுகள் கொண்ட மொத்தம் 1.16 கிலோ எடைகொண்ட 57.1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டன. அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் சென்னையில் இருந்து குவஹாத்திக்கு ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலமாக அதே நாளன்று பயணம் செய்ததாகவும், சென்னைக்கு இண்டிகோ விமானம் மூலம் அதே நாளன்று திரும்பியதாகவும் தெரிவித்தார்.
இந்த விமானத்திலேயே இரண்டு இருக்கைகளில் இருந்த தங்கப் பொருட்களை அவர் எடுக்க வேண்டும் என்றும் அவர் ஒரு இருக்கையில் இருந்த தங்கக் கட்டிகளை மட்டுமே எடுக்க முடிந்தது என்றும் தெரிவித்தார். இரண்டு வழக்குகளிலும் தமக்கு தொடர்பு இருப்பதை அவர் ஒப்புக் கொண்டார். கைது செய்யப்பட்டார். மொத்தம் 1.14 கோடி ரூபாய் மதிப்பிலான 2.32 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு சுங்க சட்டத்தின்படி பறிமுதல் செய்யப்பட்டது. ஒருவர் கைது செய்யப்பட்டார்.
Leave your comments here...