பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் மூலம் பிரேசில் செயற்கைகோளை வருகிற 28-ம் தேதி விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தகவல்
பெங்களூரு வருகிற 28-ந் தேதி பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட் மூலம் பிரேசில் செயற்கைகோளை விண்ணில் ஏவ திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ கூறியுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி51 ராக்கெட் மூலம் பிரேசில் நாட்டின் அமசோனியா-1 என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் விண்வெளி திட்டமான இது, வரும் 28-ம் தேதி காலை 10.23 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் மேலும் 20 சிறிய ரக செயற்கைக்கோள்களும் அனுப்பப்படுகின்றன.
இதில் இந்தியாவை சேர்ந்த ஒரு ஸ்மார்ட்-அப் நிறுவனத்தின் செயற்கைக்கோளும் அடங்கும். இது முழுக்க முழுக்க நியூ விண்வெளி இந்தியா நிறுவனத்தின் (என்.எஸ்.ஐ.எல்.) முதல் வணிக ரீதியான திட்டம் ஆகும். இந்த அமசோனியா-1 செயற்கைக்கோள், பூமியை கண்காணிப்பதற்காக அனுப்பப்படுகிறது. இது பிரேசில் நாட்டில் அமேசான் காடுகளின் நிலை குறித்த துல்லியமான தகவல்களை கொடுக்கும். காடுகள் அழிப்பு குறித்த தகவல்களை பெற முடியும்.
#PSLVC51 is scheduled to launch #Amazonia1 and 20 Co-passenger satellites on February 28, 2021 from Satish Dhawan Space Centre SHAR
For details visit: https://t.co/MrMojYgAnH#NSIL #INSPACe
— ISRO (@isro) February 5, 2021
அந்த 20 சிறிய செயற்கைக்கோள்களில் ஆனந்த், சதீஷ்தவான் உள்ளிட்ட செயற்கைக்கோள்களும் அடங்கும். இந்த சதீஷ்தவான் செயற்கைக்கோள், சென்னையை சேர்ந்த ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா என்ற நிறவனம் தயாரித்துள்ளது. சென்னையில் உள்ள ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூரை சேர்ந்த ஸ்ரீசக்தி என்ஜினீயரிங் கல்லூரி ஆகியவை தயாரித்த யுனிட்டிசாட் செயற்கைக்கோளும் அதில் இடம் பெற்றுள்ளது. இது மூன்று செயற்கைக்கோளின் கலவை ஆகும்.
ஆனந்த் செயற்கைகோளை தயாரித்துள்ள பிக்சல் நிறுவன தலைமை செயல் அதிகாரி அவைஸ் அகமது கூறுகையில், “இந்தியாவின் முதல் வணிக தனியார் செயற்கைக்கோள், இந்திய ராக்கெட்டில் விண்ணில் செலுத்தப்படுகிறது. இது எங்களுக்கு பெருமை அளிப்பது மட்டுமின்றி, நமது நாட்டின் திறமையான நிறுவனத்துடன் பணியாற்றுகிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.
Leave your comments here...