`காருண்யா நகர்’ என்ற பெயரை பழையபடி `நல்லூர்வயல்’ என்று மாற்ற வேண்டும் – போராட்டத்தில் ஈடுபட்ட கோவை நல்லூர்வயல் மக்கள்
கோவை அருகேயுள்ள நல்லுார்வயல் கிராமத்தின் பெயரை, ‘காருண்யா நகர்’ என மாற்றியதை கண்டித்து, நேற்று கண்டன பேரணி நடத்தப்பட்டது.
கோவை மாவட்டம், சிறுவாணி அருகே, மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட, நல்லூர்வயல் என்ற கிராமம் இருக்கிறது. விவசாயம்தான் அங்கு பிரதானம். கிறிஸ்துவ மதபோதகர் பால்தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் இங்குதான் இருக்கிறது. இது தவிர, காருண்யா மருத்துவமனை, ஜெபக்கூடம் என்று காருண்யா குழுமத்துக்குச் சொந்தமாக கட்டங்களும் இடங்களும் அங்கு அதிகம் இருக்கின்றன.
நொய்யல் வழித்தட ஆக்கிரமிப்பு, யானை வழித்தட ஆக்கிரமிப்பு, பழங்குடி மக்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்றம் போன்ற குற்றச்சாட்டுகளில் சிக்கியது காருண்யா குழுமம். சமீபத்தில் அந்தக் குழுமத்தில் வருமான வரி சோதனையும் நடைபெற்றது.இதற்கிடையே, `நல்லூர்வயல்’ என்றழைக்கப்பட்ட அந்த கிராமம், நாளடைவில் காருண்யா நகர் என்று மாறியது. காவல் நிலையம், தபால் நிலையம் என முக்கிய அரசு அலுவலகங்களே காருண்யா நகர் பெயருக்கு மாறின. இதனால், நல்லூர்வயல் என்ற பெயர் பயன்பாட்டில் இல்லாமல் போகும் சூழ்நிலை உருவாகும் என புகார் எழுந்தது.
கிராமத்தின் பெயரையும், கலாசாரத்தையும் மீட்டெடுக்க, கிராம மக்கள், ‘நல்லுார் வயல் பாதுகாப்பு குழு’ என்ற அமைப்பை துவக்கினர். நேற்று மாலை, ஆலாந்துறை பகுதியில் கண்டன பேரணி நடத்தினர். மத்வராயபுரத்தில் திரண்ட மக்கள், நல்லுார்வயல் நோக்கி சென்றபோது, போலீசார் தடுத்து கைது செய்தனர்.ஆனால், போலீஸார் தடுத்ததால், சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும், காருண்யா நகர் என்ற ஊர்ப் பலகைக்கு முன்பு, நல்லூர்வயல் என்ற பலகையை வைத்துவிட்டனர். அதேபோல, கூகுள் மேப்பில், காருண்யா நகர் என்பதை நல்லூர்வயல் என்று மாற்றுவதற்கான முயற்சிகளில் அந்தப் பகுதி இளைஞர்கள் இறங்கியுள்ளனர்.
இது குறித்து நல்லுார் வயல் பாதுகாப்பு குழுவினர் கூறுகையில்:- ‘நல்லுார் வயல் கிராமத்தின் பெயரை, காருண்யா நகர் என மாற்றியுள்ளனர். இங்குள்ள அனைத்து அரசு அலுவலகங்களின் பெயர்களும், காருண்யா நகர் என மாற்றப்பட்டுள்ளது. ஒரு கிராமத்தின் பெயரை மாற்றுவது, அந்த கிராமத்தை அழிப்பதற்கு சமம்.’கிராமத்தின் கலாசாரம், வாழ்க்கை முறை புதைக்கப்படும். காருண்யா நகர் என்ற பெயரை மீண்டும் நல்லுார் வயல் என மாற்ற, அரசு நடவடிக்கை எடுக்ககோரி, கிராம மக்கள் சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.அதேநேரத்தில், ஊராட்சி அலுவலகங்களில் எங்கள் கிராமம் இப்போதும் நல்லூர்வயல் என்றே பதிவாகியிருக்கிறது.
மத்வராயபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில், தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது. அதில், ஊராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும், ‘காருண்யா நகர்’ என்ற பெயரை மாற்றி, நல்லுார் வயல் என, மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கிராமம் துவங்கும் இடத்தில், நல்லுார் வயல் கிராமத்தின் பெயர் பலகையும் வைக்கப்பட்டது.
Leave your comments here...