சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கு : தலைமறைவான சிஹாபுதீன் சென்னையில் கைது
தமிழக-கேரள எல்லையில் குமரி மாவட்டம், களியக்காவிளை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் பணியில் இருந்த களியக்காவிளை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கடந்த 2020, ஜனவரி மாதம் 8 ம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு குற்றப்பிரிவி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணை, சிசிடிவி காட்சிப் பதிவுகள் மூலம் அவரைக் கொலை செய்தது குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம், கேரளா கோட்டாறு பகுதியைச் சேர்ந்த தவுபிக் என்பது தெரியவந்தது.இருவரும் தலைமறைவான நிலையில், அவர்களை அண்டை மாநிலங்களிலும் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் வில்சனைச் சுட்டுக் கொல்வதற்குத் துப்பாக்கி வழங்கியதாக இஜாஸ் பாட்ஷா என்ற ஆம்னி பேருந்து ஓட்டுநரை பெங்களூருவில் கர்நாடக போலீசார் கைது செய்தனர்.
அவருக்கும் வில்சன் கொலையாளிகளுக்கும் சம்பந்தம் இருக்குமோ என்கிற ரீதியில் போலீஸார் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜன.14-ம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரெயில் நிலையத்தில் பதுங்கி இருந்த அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்கலாம் என்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது. பிப்ரவரி 2-ல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு கையில் எடுத்தது. விசாரணையில் வில்சன் கொலையில் 7 பேருக்கு மறைமுகத் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்தது.இந்த வழக்கு சம்பந்தப்பட்ட அப்துல் ஷமீம், தவுபிக், காஜா மொகிதீன், மெஹபூப் பாஷா, இஜாஸ் பாஷா மற்றும் ஜாபர் அலி ஆகியோரை ஏற்கெனவே கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
NIA arrests absconding accused in Police Sub-Inspector Wilson Murder Case of Tamil Nadu pic.twitter.com/f1kd8B4k6g
— NIA India (@NIA_India) January 6, 2021
இந்நிலையில் இந்த வழக்குக்குத் தொடர்புடையதாகக் கருதப்படும் சென்னையைச் சேர்ந்த சிஹாபுதீன் (எ) சிராஜுதீன் (எ) காலித் (39) என்பவர் கத்தாரிலிருந்து சென்னை வந்தபோது, தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.சிஹாபுதீன் குற்றவாளிக்கு ஆயுதம் கொடுத்தவர் என்பதும், இவர் கொலை நடந்தவுடன் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதும் குறிப்பிடத்தக்கது. ஓராண்டாக வெளிநாட்டில் இருந்தவர் இன்று சென்னை திரும்பும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Leave your comments here...