இந்தியாவின் கோவிட் தடுப்பூசி, அறிவியலின் முன்னேற்றம் : குடியரசுத் துணைத் தலைவர் பாராட்டு.!
இரண்டு கோவிட்-19 தடுப்பூசிகளுக்கு, நேற்று அவசரகால அனுமதி வழங்கப்பட்டதைப் பாராட்டியுள்ள குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு, இது அறிவியலில் இந்தியாவின் முன்னேற்றம் என்றும், மனித குலத்துக்கு பெரியளவில் பயனளிக்கும் எனவும் கூறியுள்ளார்.
இது குறித்து சமூக இணையளத்தில் எழுதியுள்ள வெங்கையா நாயுடு, தற்சார்பு இந்தியா எப்படி பயன் அடைகிறது என்பதற்கு இது ஒரு அறிகுறி என்றும், இது இந்தியர்களுக்கு மட்டும் பலன் அளிக்காமல், மனித குலத்துக்கு மிகப் பெரிய அளவில் பலனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதில் கடந்தாண்டு நமது நாடு காட்டிய உறுதியை, இந்தாண்டு, அதே உத்வேகத்துடன், மக்களுக்கு தடுப்பூசியைக் கொண்டு செல்வதிலும் காட்ட வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
‘‘மிகவும் அவசியமான கோவிட் தடுப்பூசியை, உள்நாட்டில், அதிகளவு உற்பத்தி செய்யும் திறனை வெளிக்காட்டியதன் மூலம் கொள்ளை நோயிலிருந்து மனித குலத்தைக் காப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியில், ஒட்டுமொத்த வைரஸ் அணுகுமுறையில் தனிச்சிறப்பான அம்சங்கள் உள்ளன. இது பாராட்டத்தக்க சாதனை. இதில் தொடர்புடையவர்களின் தொலைநோக்கு மற்றும் விடாமுயற்சிகளுக்காக அனைவருக்கும் பாராட்டுக்கள்’’ என நாயுடு கூறியுள்ளார்.
கோவிட்-19 தொற்று காரணமாக 2020ம் ஆண்டில், மோசமான பாதிப்புகள் ஏற்பட்டது என்றும், மீண்டும் பாதுகாப்புடன் இயல்பு நிலை திரும்ப, தடுப்பூசிகள்தான் ஒரே கவசம் என திரு வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். அறிவியல் முயற்சிகளால், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது, அறிவியலின் வெற்றி என திரு வெங்கையா நாயுடு கூறினார். ‘‘தேவைப்படும் ஒவ்வொருவருக்கும், தடுப்பூசி கிடைக்கும் வரை கொண்டாட்டங்கள் காத்திருக்க முடியும் என்றாலும், இந்த நம்பிக்கையான தருணத்திற்கு மகிழ்ச்சி தெரிவிப்பது ஒன்றும் தவறில்லை’’ என அவர் கூறினார். ‘‘ஸ்பானிஸ் ப்ளூ காய்ச்சலுக்குப்பின், கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட மிகப் பெரிய சவாலான இந்த கோவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளைக் கிடைக்கச் செய்வதற்கான இந்தியாவின் உற்சாகமான முயற்சிகள், உலக மக்களுக்கு இந்தியா மீதும் அதன் தலைமை மீது நம்பிக்கை அளிக்கிறது’’ என அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி உருவாக்கும் மற்றும் போடும் முறைகளுக்கு கடுமையான நெறிமுறைகள் வழிகாட்டுகின்றன எனவும், கடுமையான கண்காணிப்பில் எந்தவித சமரமும் இல்லை என கூறிய குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு, கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் அளிக்கும் முன் நாட்டுக்கு ஒழுங்குமுறையாளர்கள் அளித்த உறுதியை குறிப்பிட்டார். “தடுப்பூசி அறிவிப்பால், ஏற்பட்டுள்ள இந்தியாவின் அறிவியல் முன்னேற்றம், தற்சார்பு இந்தியா உணர்வுக்கு தெளிவான சான்று. தற்சார்பு இந்தியா என்றால் என்ன என்பதை, நாட்டு மக்களுக்கு மட்டும் அல்லாமல், உலகத்துக்கும் இது காட்டியுள்ளது. இந்த முக்கியமான தருணத்தில், இந்தியா உயர்ந்து நிற்பது மிகப் பெரிய மதிப்பீடு. இது அனைவருடனும் பகிர்ந்து கொள்வதற்கும் கவனித்துக் கொள்வதற்குமான நம்முடைய நெறிமுறைகளை நிரூபிக்கிறது. தடுப்பூசி அறிமுகத்தை விரைவில் தொடங்குவது, கடந்த ஆண்டின் துயரங்களையும் கவலைகளையும் விட்டுவிடுவதற்கான ஒரு தொடக்கமாகும்’’
கோவிட் நிலைமையை கடந்த 2020ம் ஆண்டு எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசுகளின் தலைமைகளுடன் நாடு ஒன்றிணைந்து செயல்பட்டது. அதன் காரணமாக கொரோனா தொற்றைக் கட்டுபடுத்த முடிந்தது. அதே தீர்மானத்தை, இந்தாண்டு மக்களுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்வதிலும் காட்ட வேண்டும் என வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
Leave your comments here...