பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க முடிவு..!!
- October 23, 2019
- jananesan
- : 829
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின், மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது, அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஒருபோதும் தனியார் மயமாக்கப்படமாட்டது என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடு கைவிடப்படாது என்றும், உறுதிபடக் கூறினர். பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க மத்திய அமைச்சரவை கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்களுக்குப் புத்துயிரூட்டவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
மேலும் பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் நிறுவனங்களுக்கு 4-ஜி அலைக்கற்றைகளை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், அலைக்கற்றைக்கான முதலீடாக ரூ.20,140 கோடி மற்றும் அதற்கான ஜிஎஸ்டி தொகை ரூ. 3,674 கோடியை அரசே ஏற்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனங்கள் பிராட்பேண்ட், அதிவேக தரவு உள்ளிட்ட இதர சேவைகளை வழங்க வழி ஏற்படும். மேலும், ரூ.15,000 கோடிக்கு இந்த இரு நிறுவனங்களும் உத்தரவாதப் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான ஊழியர்களுக்கு இந்த இரு நிறுவனங்களும் கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவிக்க முடிவு செய்துள்ளன. இதற்கு ஆகும் செலவையும் மத்திய அரசு பட்ஜெட் ஒதுக்கீடு மூலம் ஏற்பது எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஒருங்கே இணைக்கப்படும் என்றும், அதன் மறுசீரமைப்புக்காக 14,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், மத்திய அரசு கூறியிருக்கிறது. 4ஜி எனப்படும் நான்காம் தலைமுறை அலைக்கற்றை, BSNLக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கு, கேபினட்-ன் நிர்வாக ஒப்புதல் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல் பணியாற்றும் ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற விரும்பினால், அவர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கேபினட் ஒப்புதல் அளித்திருக்கிறது