அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதி : ஜனவரி 26ல் அடிக்கல் நாட்டு விழா
உத்திரபிரதேச உள்ள அயோத்தியில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம், கடந்தாண்டு தீர்ப்பு அளித்தது. அந்த இடத்தில், ‘ராமர் கோவில் கட்டலாம்’ என, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அயோத்தியின் முக்கிய இடத்தில், மசூதி கட்டுவதற்கு, 5 ஏக்கர் நிலம் ஒதுக்க வேண்டும்’ என, மாநில அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சோஹாவால் தாலுகாவின் தானிபுர் கிராமத்தில், 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. இங்கு மசூதி கட்டுவதற்காக, சன்னி வக்ப் வாரியம் சார்பில், ஐ.ஐ.சி.எப்., எனப்படும், இந்தோ – இஸ்லாமிக் கலாசார அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. மசூதி கட்டுவதற்கான வடிவமைப்புகள் இறுதி செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, அறக்கட்டளையின் செயலர் அத்தார் ஹூசைன் கூறியதாவது: மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, குடியரசு தினமான, ஜன., 26ல் நடக்கும். நாட்டின் பன்முகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்பட்ட தினத்தில், மசூதி கட்டும் பணியை துவக்க உள்ளோம். மசூதி வளாகத்தின், மாதிரி வரைபடங்கள், நாளை வெளியிடப்படும்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமே, அந்த வளாகத்தில் அமைய உள்ள, பல்நோக்கு மருத்துவமனைதான். ஏழை எளிய மக்களுக்கு உணவளிக்க, மிகப் பெரிய சமையலறை, நுாலகம் ஆகியவையும் அமைய உள்ளன. ஒரே நேரத்தில், 2,000 பேர் தொழுகை நடத்தும் வசதியுடன், மசூதி இருக்கும். இது, இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போல இருக்காது. வட்ட வடிவில் இருக்கும்.பல்நோக்கு மருத்துவமனை, 300 படுக்கை வசதிகள் கொண்டதாக இருக்கும்.
இந்த மருத்துவமனை வளாகத்தில், செவிலியர் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கல்லுாரி துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது. ஏழை, எளிய மக்களுக்கு, தினமும், காலை மற்றும் இரவில் உணவு வழங்கும் வகையில், பிரமாண்ட சமையலறை அமைக்கப்படும்.இந்த மொத்த வளாகமும், சமுதாயப் பணியாற்றும் மையமாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Leave your comments here...