லோக் அதாலத் மூலம், 2020ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைப்பு.!
லோக் அதாலத் மூலம், 2020ஆம் ஆண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.3228 கோடி மதிப்பிலான பணம் தீர்வுத் தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் கடைசி லோக் அதாலத், தேசிய சட்டச் சேவைகள் ஆணையத்தின் கீழ் நாடு முழுவதும் நேரடியாகவும், காணொலிக் காட்சி மூலமாகவும் கடந்த 12ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த லோக் அதாலத் நிகழ்ச்சியில் மாநில மற்றும் மாவட்ட சட்டச் சேவை ஆணையங்கள் கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றின.
லோக் அதாலத் நடத்துவதற்காக 31 மாநில சட்டச்சேவைகள் ஆணையம், 8151 அமர்வுகளை அமைத்தது. இவற்றின் மூலம் மொத்தம் 10,42,816 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இவற்றில் 5,60,310 வழக்குகள், வழக்கு தொடர்வதற்கு முந்தைய நிலையில் இருந்தவை. 4,82,506 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தவை. இதன் மூலம் சுமார் 3227.99 கோடி தொகை மதிப்பிலான வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டதாக தேசிய சட்டச்சேவைகள் ஆணைய இணையதளத்தில், மாநிலங்கள் தெரிவித்துள்ளன.
கிரிமினல் குற்றம், திருமணப் பிரச்சினை, அரசுத்துறை, விபத்து இழப்பீடு, குடும்பச் சொத்துப் பிரச்சினை மற்றும் இதர இழப்பீடு தொடர்பான வழக்குகள் இந்த லோக் அதாலத் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன.
Leave your comments here...