சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜிப் பேனர்ஜியை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை.!
கடந்த, 2019 நவ., 11ல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, ஏ.பி.சாஹி பதவியேற்றார். இவரது பதவிக் காலம், வரும், 31ம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான கொலீஜியம், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள சஞ்சிப் பானர்ஜியை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, பரிந்துரை செய்து உள்ளது.
உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் இந்த பரிந்துரை, மத்திய சட்ட அமைச்சகத்தால் ஏற்கப்பட்டு, அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின், சென்னை உயர் நீதிமன்றத்தின், 50வது தலைமை நீதிபதியாக, அவர் நியமிக்கப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த, 1961 நவ., 2ல் பிறந்த சஞ்சிப் பானர்ஜி, கோல்கட்டா பல்கலையில் சட்டப் படிப்பை முடித்து, 1990ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். கோல்கட்டா, டில்லி, ஜார்க்கண்ட், அலகாபாத், மும்பை ஆகிய உயர் நீதிமன்றங்களில், வழக்கறிஞராக தொழில் செய்தார். கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில், 2006 ஜூன், 22ல், நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அதன் இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ளார். வினித் கோத்தாரி மாற்றம் சென்னை உயர் நீதிமன்றத்தில், இரண்டாவது மூத்த நீதிபதியாக உள்ள வினித் கோத்தாரியை, குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யவும், கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
இதற்கிடையே, ஒடிசா, தெலங்கானா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதிகள் குறித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புகார் தெரிவிக்கதாக தகவல் வெளியாகிய நிலையில், ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மகேஸ்வரி சிக்கிம் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.கோசுவாமி, ஆந்திர உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...