டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கு மாறியது இந்திய தபால் துறை வங்கி: ‘டாக் பே’ கைப்பேசி செயலி தொடக்கம்

இந்தியா

டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கு மாறியது இந்திய தபால் துறை வங்கி: ‘டாக் பே’ கைப்பேசி செயலி தொடக்கம்

டிஜிட்டல் பண பரிமாற்றத்துக்கு மாறியது இந்திய தபால் துறை வங்கி: ‘டாக் பே’ கைப்பேசி செயலி தொடக்கம்

தபால் துறை மற்றும் இந்திய தபால் துறை வங்கி (ஐபிபிபி), டிஜிட்டல் முறையில் பணம் செலுத்த ‘டாக் பே’ என்ற புதிய செயலியை காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கியது. நாடு முழுவதும் டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ‘டாக் பே’ செயலி தொடங்கப்பட்டுள்ளது.

‘டாக் பே’ செயலி டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் சேவையை மட்டும் வழங்கவில்லை, நாடு முழுவதும் உள்ள தபால் துறை நெட்வொர்க் மூலம் இந்திய தபால் வங்கியின் டிஜிட்டல் வங்கி சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் இந்திய தபால் துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், தங்களின் உறவினர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தலாம். கடைகளில் ‘க்யூஆர்’ குறியீடை ஸ்கேன் செய்து வாங்கிய பொருட்களுக்கு பணம் செலுத்தலாம். இதர கட்டணங்களையும் செலுத்தலாம்.


இந்த ‘டாக் பே’ செயலியை மத்திய தகவல் தொடர்பு, மின்னனுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.


இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: முடக்க காலத்தில், இந்திய தபால் துறை மக்களுக்கு நேரடியாகவும், டிஜிட்டல் மூலமாக பல சேவைகளை வழங்கியது. தற்போது ‘டாக் பே’ தொடங்கப்பட்டுள்ளதன் மூலம், தபால் துறை சேவைகள் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைகிறது. இந்த புதுமையான சேவை, வங்கி சேவைகளை மட்டும் அல்ல, ஆன்லைன் தபால் சேவைகளையும் வழங்குகிறது. இதன் மூலம் ஒருவர் வீட்டிலிருந்து தபால் சேவைகளை ஆர்டர் செய்ய முடியும், நிதி சேவைகளையும் பெற முடியும். ஆன்லைன் மூலம் பணம் செலுத்துதல், வீட்டிலேயே தபால் நிதி சேவைகளை பெறுதல் என்ற பல சேவைகள் மூலம், பிரதமரின் தொலைநோக்கான நிதி உள்ளடக்கம் மற்றும் தற்சார்பு இந்தியா நோக்கி தபால் துறை முன்னேறியுள்ளது. இவ்வாறு அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இந்திய தபால் துறை வங்கி வாரிய தலைவர் திரு பிரதீபா குமார் பிசாய் கூறுகையில், ‘‘டாக் பே செயலி, வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தம் முறைக்கு எளிதான தீர்வை வழங்குகிறது. செயலி மூலம் அல்லது நம்பிக்கைக்குரிய தபால்காரரின் உதவி மூலமும் வங்கி சேவைகளை பெற முடியும். ஒவ்வொரு இந்தியரின் நிதி தேவைகளை பூர்த்தி செய்வதற்கான, உண்மையான இந்திய தீர்வாக ‘டாக் பே’ உள்ளது’’ என்றார்.

Leave your comments here...