இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்ட குழம்பேஸ்வரர் கோவிலில் தங்கப் புதையல் கண்டெடுப்பு..!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் இரண்டாம் குலோத்துங்கச்சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும் குழம்பேஸ்வரர் கோவில் உள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த ஊர் பொதுமக்களும், கோவில் விழாக்குழுவினரும் முடிவு செய்தனர்.
இதற்காக பழங்கால கோவிலை இடிக்க முடிவு செய்தனர். வருவாய்த்துறையிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் இந்த பணியினை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஜே.சி.பி. கொண்டு கோவில் கருவறையின் நுழைவு வாயிலின் முன் உள்ள கருங்கற்களாலான படிக்கட்டுகளை அகற்றினர். அப்போது அதன் கீழ் இருந்த துணியால் சுற்றப்பட்ட சிறிய மூட்டையில் தங்க ஆபரணங்கள், தங்க நாணயங்கள் இருந்ததைக் கண்டறிந்தனர்.சுமார் 100 சவரன் அளவில் தங்க நகைகள் இருந்துள்ளன.
இதைத்தொடர்ந்து கோவிலை முற்றிலும் இடித்துள்ளனர். கோவில் இடிப்பு மற்றும் புதையல் குறித்த தகவல் அறிந்த வருவாய்த்துறையினர், காவல்துறையினருடன் கோவிலுக்கு வந்து பொதுமக்களிடமிருந்த நகைகளைக் கைப்பற்றி மதிப்பீடு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட நகைகளை போலீசார் உதவியோடு கிராமமக்களிடம் இருந்து மீட்டு கருவூலத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, 16-ம் நூற்றாண்டில் நாயக்கர் காலத்தில் தங்கம் பயன்பாட்டில் இருந்ததாகவும், அப்போது அன்னியர்கள் படையெடுப்பு காரணமாக சாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நகைகளை இந்த கோவிலின் பல்வேறு பகுதிகிளில் புதைத்து வைத்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும் அம்பாளையும், பல அரிய தெய்வ சிலைகளை தற்போது காணவில்லை என்று ஊர்மக்கள் கூறுகிறார்கள்.
Leave your comments here...