போர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் இரண்டாவது ஆண்டாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.!
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 17வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு, 30 நாடுகளை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில், ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் 3வது இடத்தில் உள்ளார். ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது ஆண்டாக 2வது இடத்தில் உள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37வது இடத்திலும் உள்ளனர். இந்தியா தரப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹெச்.சி.எல்., சிஇஓ ரோஷினி நாடார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம்பெற்றுள்ள நிர்மலா சீதாராமன் 41வது இடத்தையும், ரோஷினி நாடார் 55வது இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்தாண்டு நிர்மலா சீதாராமன் 34வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் 10 அரசியல் தலைவர்கள், 38 தலைமை நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொழுதுபோக்கு துறையை சேர்ந்த ஐந்து பெண்கள் உள்ளனர். இதில் இடம்பிடித்துள்ளவர்கள் அனைவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அந்தந்த துறைகளில் காலூன்றி திறம்பட செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 17 பெண்கள் புதிதாக இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...