கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன் – சத்குரு
மக்கள் நலனுக்காக தங்களின் உயிர்களை பணயம் வைத்து சேவையாற்றி வரும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தான் முதலில் கொரோனா தடுப்பு மருந்தை கொடுக்க வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்தை கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் மத்திய, மாநில அரசுகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. இந்நிலையில், Bengaluru Tech Summit 2020 என்ற தொழில்நுட்ப மாநாடு ஆன்லைன் வாயிலாக சமீபத்தில் நடந்தது.
இதில் சிறப்புரை ஆற்றிய சத்குரு கொரோனா தடுப்பு மருந்து தொடர்பாக பேசியதாவது: கொரோனா தடுப்பு மருந்தை பெற்று கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன். தங்கள் உயிரை பணயம் வைத்து களப் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு மருந்தை முதலில் வழங்க வேண்டும்.
மேலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகி ஆபத்து நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதில் ஊழல் நடப்பதற்கு வாய்ப்புள்ளது.
இதை தடுப்பதற்கு பொருளாதார நிலையில் வசதியாக இருப்பவர்கள் அதை குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கும் விதமாக தடுப்பு மருந்துக்கு அரசு விலை நிர்ணயிக்க வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகளும் குறையும். இவ்வாறு சத்குரு கூறினார்.
Leave your comments here...