தொழிலாளர் நலன் சீர்திருத்த வரைவு விதிகள் வெளியீடு : 45 நாட்களுக்குள் ஆட்சேபனைகளை தெரிவிக்கலாம்
தொழிலாளர் நலன் சீர்திருத்த வரைவு விதிகளை, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள், 45 நாட்களுக்குள், இது தொடர்பான ஆட்சேபனைகளையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
கட்டிடத் தொழிலாளர்கள், புலம் பெயர் தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், சுரங்கத் தொழிலாளர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட அனைத்து தரப்பு தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், பணிபுரியும் சூழல் விதிகள் 2020-ஐ செயல்படுத்துவது தொடர்பான சீர்திருத்தங்கள், வரைவு விதிகளாக கடந்த 19ம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.
அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.நியமன கடிதத்தில் குறிப்பிட வேண்டிய விஷயங்கள், 45 வயது நிறைவு செய்த தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் இலவச மருத்துவப் பரிசோதனை, ஆண்டுக்கு ஒரு முறை பயணப்படி, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கும் முறை, 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் இடங்களில் பாதுகாப்பு குழுக்கள் அமைத்தல், பெண் ஊழியர்களின் பணி நேரங்களுக்கான விதிமுறைகள், கூடுதல் பணி நேர கணக்கீடு, எலக்ட்ரானிக் முறையிலான வருகைப் பதிவு போன்ற அம்சங்கள் வரைவு விதியில் உள்ளன.
சுரங்க விதிமுறைகள் எளிமையாக்கப்பட்டு பாதுகாப்பு, சுகாதார விதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வேலை செய்யும் இடங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், சுகாதாரத்தையும் மேம்படுத்தும் வகையில் இந்த வரைவு விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
Leave your comments here...