கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை.!
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட மானியத் தொகையில் கமிஷன் கேட்பதாகவும், ஒப்பந்ததாரரிடம் தீபாவளி வசூல் செய்வதாக வந்த தகவலை அடுத்து இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென புகுந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுபாண்டி 14 வது நிதி மானியக் குழு மூலமாக வளர்ச்சி திட்ட பணிகளுக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஒவ்வொரு ஊராட்சிமன்ற தலைவர்களிடம் 4% லஞ்சம் கேட்பதாகவும், தொடர்ந்து கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள ஒப்பந்ததாரரிடம் தீபாவளி வசூல் வேட்டை நடப்பதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் போலீசார் கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனையில் ஈடுபட்டனர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் மற்றும் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் மற்றும் பொறியாளர் அலுவலகம் என அலுவலகத்திற்கு உள்ள அனைத்து அறைகளையும் போலீசார் சோதனை செய்தனர்.
தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலக வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பயன்படுத்தும் கார் உள்ளிட்டவைகளையும் சோதனையிட்டனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது.
இதில் கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுபாண்டி, அலுவலக உதவியாளர் அருண்பிரகாசம், வாகன ஓட்டுநர் தங்கம் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் அழகு பாண்டியிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 73,000 கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமிருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் கல்லுப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave your comments here...