பட்டாசு ஆலைகளில் உற்பத்தி பணிகள் நிறுத்தம் : பல மாநிலங்களில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்துள்ளதால் பாதிப்பு.!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் இயங்கி வந்த பட்டாசு ஆலைகளில், பெரும்பாலான ஆலைகளில் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டன.
வழக்கமாக தீபாவளிக்கு 2 நாட்கள் முன்பு வரை, பட்டாசு தயாரிக்கும் பணிகள் மற்றும் விற்பனைக்கு அனுப்பும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, பட்டாசு ஆலைகளில் உற்பத்தி 40 முதல் 50 சதவிகிதம் வரை குறைவாக இருந்தது.
கடந்த இரண்டு மாதங்களாக உற்பத்தி மற்றும் விற்பனை ஓரளவு நடந்து வந்த நிலையில், பட்டாசுகள் வெடிப்பதால் வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி, ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசுகள் வெடிக்க தடை விதித்து, அந்த மாநில அரசு உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து ஒடிசா, மஹாராஷ்ட்ரா, கொல்கத்தா, டெல்லி, சண்டிகார் மாநிலங்களிலும் பட்டாசுகள் விற்பனை மற்றும் பட்டாசுகள் வெடிக்கவும் தடைகள் பிறப்பிக்கப்பட்டது.
இந்த திடீர் தடைகளால் சிவகாசியின் பட்டாசு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிவகாசி பகுதிகளில், கடைசி நேர தீபாவளி விறுவிறுப்பு முற்றிலும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வட மாநிலங்களில் பட்டாசு விற்பனை துவங்கி, அங்கிருந்து வரும் பணத்தை வைத்து தான், இங்கு பட்டாசு ஆலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு போனஸ் பணம் வழங்கப்படும். விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் பட்டாசு ஆலை தொிலாளர்களுக்கு போனஸ் பணம் வழங்குவதற்கு, பட்டாசு ஆலை உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பட்டாசுகளின் தேவைகள் குறைந்துள்ளதால் பெரும்பாலான பட்டாசு ஆலைகளில், இன்று முதல் பட்டாசு உற்பத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தொழிலாளர்களுக்கு இன்னும் ஓரிரு நாட்களில் போனஸ் பணம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave your comments here...