இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானேக்கு, நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவி.!

இந்தியாஉலகம்

இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானேக்கு, நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவி.!

இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானேக்கு, நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவி.!

நேபாளம் வந்துள்ள, இந்திய ராணுவ தலைமை தளபதி நரவானேக்கு, நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவியை வழங்கி, அதிபர் பித்யா தேவி கவுரவித்தார்.

நேபாள ராணுவ தளபதியின் அழைப்பை ஏற்று, இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக, நேபாளத்திற்கு, நேற்று முன்தினம் வந்தடைந்தார். தலைநகர் காத்மாண்டுவிற்கு, தனி விமானத்தில் வந்திறங்கிய நரவானேக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.


நேபாள ராணுவ தலைமை தளபதி பூர்ண சந்திர தாப்பாவை, நம் ராணுவ தலைமை தளபதிநரவானே, நேற்று சந்தித்துப் பேசினார். காத்மாண்டுவில் உள்ள நேபாள ராணுவ தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில், இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுபடுத்துவது குறித்து, இருவரும் ஆலோசித்தனர். பின், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரியை, ராணுவ தளபதி நரவானே சந்தித்துப் பேசினார்.

அப்போது, நரவானேக்கு, நேபாள ராணுவத்தின் கவுரவ ஜெனரல் பதவியை வழங்கி, அதிபர் பித்யா தேவி கவுரவித்தார்.அதற்கான, பதக்கம், சான்றிதழ் மற்றும் வீரவாள் அவருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், நேபாள பிரதமர் ஒலி, இந்திய துாதர் வினய் குவாத்ரா மற்றும் இருநாட்டு மூத்த அதிகாரிகளும் பங்கேற்றனர். இருநாட்டு ராணுவத்தின் உறவுகளை வலுபடுத்த, கடந்த, 1950ம் ஆண்டு முதல், இந்தியா – நேபாளம் இடையே, கவுரவ பதவி வழங்கும், இந்த பாரம்பரிய முறை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, ராணுவ வீரர்களின் மரியாதையுடன், நரவானேவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதன்பின், நேபாள ராணுவத்திற்கு, ‘ஆம்புலன்ஸ்’கள் மற்றும், ‘வென்டிலேட்டர்’கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை, நரவானே வழங்கினார். இதேபோல், நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட, ஒரு லட்சம் முகக் கவசங்களை, நரவானேவிடம், நேபாள ராணுவ தளபதி தாப்பா வழங்கினார்

Leave your comments here...