சதுரகிரிமலைக்கு திரளாக வந்த பக்தர்கள் கூட்டம் : ஐப்பசி மாத பௌர்ணமி பூஜைகளுக்காக திரண்டு வந்தனர்..!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்கு இன்று ஏராளமான பக்தர்கள் வந்துள்ளனர்.
சதுரகிரிமலைக் கோவிலுக்கு மாதத்தில் பிரதோஷம், பௌர்ணமி, அமாவாசை தினங்களில் மட்டும், சுவாமி தரிசனம் செய்வதற்காக பொதுமக்கள், பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 3 நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று ஐப்பசி மாத பௌர்ணமி தரிசனத்திற்காக அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள், மலை அடிவாரப்பகுதியான தாணிப்பாறை வனத்துறை நுழைவு வாயிலின் முன்பு காத்திருந்தனர். தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால், மலைக்குச் செல்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருந்தால் மட்டுமே, பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மலைக்குச் செல்லும் பக்தர்கள் அனைவரும் உடல் வெப்ப பரிசோதனைக்கு பின்பே மலை ஏறுவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
மலைப் பாதையில் உள்ள நீரோடைகளில் குளிக்க வேண்டாம் என போலீசாரும், வனத்துறையினரும் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றனர். அதிகாலையிலிருந்து மதியம் வரை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், சந்தரமகாலிங்கம் சுவாமியை தரிசிப்பதற்காக, மலைக்கோவிலுக்கு சென்றுள்ளனர் என்று அதிகாரிகள் கூறினர்.
Leave your comments here...