சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜைக்கு ஒரு நாளைக்கு 1000 பக்தர்கள் மட்டும் அனுமதி.!
கேரள மாநிலம், பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் மண்டல பூஜை தொடங்குகிறது டிசம்பர் 26-ம் தேதி வரை நடக்கிறது. அதன்பின் மகரவிளக்கு பூஜை தொடங்கி 2021, ஜனவரி 14-ம் தேதிவரை நடக்கிறது.
கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவலின் பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பக்தர்களை அனுமதிப்பது குறித்து வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையில் கேரள அரசு குழு அமைத்தது.தலைமைச் செயலாளர் விஸ்வாஸ் மேத்தா தலைமையிலான குழுவில் தேவஸம்போர்டின் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், வனத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், மாநில காவல் தலைவர் உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.
அதன்படி சபரிமலை கோவிலில் மண்டல மகரவிளக்கு பூஜை காலங்களில் 1000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 2000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படலாம். பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இருப்பினும் நிலக்கல்லில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். பக்தர்கள் தாங்கள் 60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பதற்கு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு நிபுணர் குழு மேலும் பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில்: சபரிமலை கோயிலின் தந்திரியுடனும், கோயில் நிர்வாககிளுடனும் ஆலோசனை நடத்தியபின்புதான், ஆன்-லைன் தரிசனம் குறித்து முடிவு எடுக்கப்படும். நவம்பர் மாதத்திலிருந்து 2 மாதங்களுக்கு நடக்கும் மண்டலபூஜை, மகரவிளக்கு சீசனை எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்ல அரசு விரும்புகிறது எனத் தெரிவித்தார்.
Leave your comments here...