சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் விவசாயிகள் கிசான் திட்டத்தில் முறைகேடு – கணினி மையங்களுக்கு சீல்
தஞ்சை மாவட்டம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில், பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இரு கணினி மையங்களுக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.
பேராவூரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில், தகுதியற்ற நபர்களை, எவ்வித ஆவணங்களும் இன்றி, வேளாண் துறை அதிகாரிகளின் யூஸர் நேம், பாஸ்வேர்ட் பயன்படுத்தி, சில தனியார் கணினி மைய நிர்வாகிகள் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் பதிவு செய்து, முறைகேடாக பணம் பெற்று, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி, படிப்பறிவில்லாத பொதுமக்களை தவறாக வழி நடத்துவதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, முறைகேடாக பணம் பெற்ற நபர்களிடம் இருந்து பணத்தை திரும்பப் பெற்று வருகின்றனர். இதுவரை இவ்வாறு பல லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் கைப்பற்றி அரசு கருவூலத்தில் சேர்த்துள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், பாமர மக்களிடம், குறிப்பாக நூறுநாள் வேலைத்திட்ட பணியாளர்களிடம் ரூ 200 முதல் 500 வரை கட்டணம் வசூலித்து, போலியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின் நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில், தெரிந்தே தவறு செய்ததாக தனியார் கணினி சேவை மையங்கள் மீது, வேளாண் துறை மூலம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பேராவூரணி மெயின் ரோடு மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய இடத்தில் உள்ள இரு கணினி சேவை மையங்கள் புகாருக்கு ஆளான நிலையில், பேராவூரணியில் உள்ள கணினி சேவை மையத்தை, பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி தலைமையில், வருவாய் ஆய்வாளர் கிள்ளிவளவன், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிருஷ்ணன், கிராம உதவியாளர் சக்திவேல், சிவகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.
Leave your comments here...