மண்டல பூஜைக்கு பக்தர்களுக்கு அனுமதி: ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதி -திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு.!
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் முதல் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் ஓண பூஜை, ஓண சத்யா போன்றவை பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. இந்நிலையில், ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால், நாடு முழுவதும் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் பக்தர்களை அனுமதிக்கலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், சபரிமலையில் மண்டல காலம் முதல் பக்தர்களை அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது. என்றாலும், முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் இம்மாத இறுதியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அப்போது தெரிவித்தார்.
இந்நிலையில், திருவிதாங்கூர் தேவசம்போர்டு சார்பில் அரசுக்கு அளித்துள்ள பரிந்துரையில், ‘மண்டல காலம் தொடங்கும் நவம்பர் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.முழுக்க முழுக்க ஆன்-லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். முன்பதிவு செய்யும்போது கொரோனா நெகட்டிவ் சான்றிதழையும் தாக்கல் செய்ய வேண்டும். மண்டல காலத்துக்கு முன்னோடியாக, சோதனை அடிப்படையில் ஐப்பசி மாத பூஜைகளின்போது (அக்டோபர் 16 முதல் 21 வரை) பக்தர்களை அனுமதிக்கலாம்,’ என கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக வரும் 28ம் தேதி முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.
அதன்படி மண்டல மகர விளக்கு பூஜை காலங்களில் ஒரு நாளைக்கு 5000 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மேலும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நிலக்கல்லில் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படும். பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் இவ்வாறு திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...