கி.பி.8ம் நுாற்றாண்டு பாண்டியா் கால விஷ்ணு சிலை கண்டுபிடிப்பு.!
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி வட்டம், பெரிய உலகாணி எனும் கிராமத்தில் குண்டாற்றின் மேற்கரையில் எட்டாம் நுாற்றாண்டு விஷ்ணு சிலை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் இருக்கக்கூடிய கப்பலுாரில் உள்ள மதுரை காமராஜா் பல்கலைகழக உறுப்புக் கல்லுாரி இளநிலை மூன்றாம் ஆண்டு தமிழ்த்துறை மாணவா் கண்ணன் மற்றும் அவரது துறைப் பேரராசிரியா் .சங்கையா (தமிழ்த்துறை கொடுத்த தகவலின் படி இச்சிலையினை மதுரையில் உள்ள காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் செயல்பட்டுவரும் அரசு அருங்காட்சிய காப்பாட்சியா் மீ.மருதுபாண்டியன் இளம் ஆய்வாளா் .உதயகுமார் இனணந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் இது எட்டாம் நுாற்றாண்டினைச் சார்ந்த பாண்டியா் கால சிற்பம் என்பது உறுதிசெய்யப்பட்டது
இக்காலக்கணக்கீடானது சிற்பத்தின் தன்மை, அமைப்பு, அவற்றில் உள்ள ஆயுதங்கள் போன்றவற்றால் கணிக்கப்பட்டது. மேலும் குறிப்பாக முப்புரிநுாலானது வலது கைக்கு மேலாக செல்வது உற்றுநோக்கத்தக்கது. இச்சிலைபோன்ற அமைப்பில் பாண்டிய நாட்டில் பல இடங்களில் கிடைத்துள்ளது. உதாரணமாக திருமலாபுரம், திருப்பரங்குன்றம், செவல்பட்டி போன்ற இடங்களில் இதே போன்ற சிற்ப அமைப்புடன் கூடிய கற்சிற்பங்கள் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்லவா் காலத்திலும் இதே போன்று வலது கைக்கு மேலாக முப்புரிநுால் செல்லும் அமைப்புடன் கூடிய கற்சிற்பங்கள் ஏராளமாக கிடைத்துள்ளது.
சிற்ப அமைதியின் மூலம் நின்ற நிலையில் நான்கு கைகளுடன் காட்சியளிக்கிறார். மேற்கைகளின் முறையே வலது கையில் சக்கரம் உடைந்த நிலையிலும், இடது கையில் சங்கும் உள்ளது. கீழ் வலது கை வரத மற்றும் இடது கை கடி முத்திரையிலும் உள்ளது. சக்கரம் மற்றும் சங்கின் அமைப்பானது இச்சிற்பம் மிகப் பழமையானது என்பதினை மேலும் உறுதிப்படுத்துகிறது.
இவ்வூரின் பழைய பெயா் குலசேகராதிப சதுா்வேதிமங்கலம் என்றும் உலகுணிமங்கலம் என்றும் அறியப்படுகிறது. இவ்வூரானது எட்டாம் நுாற்றாண்டு (பாண்டியா் காலம்) முதற்கொண்டு சிறப்பு பெற்றுவிளங்குகிறது என்பது தெரியவருகிறது.
மேலும் இவ்வூரினை பிராமணா்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட பிரம்மதேய கிராமமாகும். கி.பி.13ம் நுாற்றாண்டில் வெளியிடப்பட்ட பாண்டியா் கால கல்வெட்டின் படி இவ்வூரிலிருந்த கிராமசபையார் பாசிபாட்ட வரி (மீன்பிடிப்பதற்கான வரி) வருவாயைக் கொண்டு ஆண்டு தோறும் குளங்களைக் குழிவெட்டி பராமரிக்க அனுமதித்துள்ள செய்தி சொல்லப்படுகிறது. இக்கல்வெட்டானது தமிழ் மற்றும் சமஸ்கிருதம் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இவ்வூா் தொடா்பான கல்வெட்டு ஒன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கல்வெட்டுகளிலும் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...