நீட் தேர்வு வந்ததால் தான் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது – அர்ஜூன் சம்பத்
நீட் தேர்வு வந்ததால் தான் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.நீட் தேர்வு மையங்கள் பயிற்சி அளிக்காமல் தற்கொலையை ஊக்குவிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கும் நிலை உள்ளது என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி சார்பில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என அவரது புகைப்படத்தை வைத்து பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது; நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும். இந்திய மக்களும் அதற்கு பிரார்த்திக்க வேண்டும். அவரை ஆதரிக்க காரணம் என்னவென்றால், பாகிஸ்தானுக்கு கொடுத்த நிதியுதவியை நிறுத்தியவர். அரசியல் சாசனம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோது ஆதரித்தார். சீனாவில் இருந்து கரோனா தீ நுண்மி பரவி உலக நாடுகள் பாதிக்கப்பட்டபோது, அந்நாட்டுக்கு எதிராக பொருளாதார தடையை விதித்தார். கரோனா தொற்று நோய் சீன தொற்று நோய் என்று காட்டமாக தெரிவித்தார்.
அமெரிக்காவில் இந்திய பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்த அதிபர். அதே போல் இந்தியாவுக்கு ட்ரம்ப் வந்தபோது குஜராத்தில் பிரமாண்ட வரவேற்பு அளித்து பிரதமர் மகிழ்ந்தார். பயங்கரவாதத்துக்கு எதிரான ட்ரம்ப் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளார். அவருடைய வெற்றிக்காக அமெரிக்காவில் உள்ள இந்து மக்கள் கட்சியினர் பணியாற்றி வருகின்றனர்.
நீட் தேர்வு மையங்கள் பயிற்சி அளிக்காமல் தற்கொலையை ஊக்குவிக்கிறது. இறந்தவர்களின் குடும்பத்துக்கு அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு பணம் கொடுக்கும் நிலை உள்ளது. இவ்வாறு இருந்தால் தமிழகத்தில் நிதிப் பற்றாக்குறை ஏன் வராது. அண்மையில் சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சிவனடியார் ஒருவர் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். அதற்கு காரணமான போலீஸ் அதிகாரி கைது செய்யப்படவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் அருண் என்பவர் கொலை செய்யப்பட்டார். அவர்களது குடும்பத்துக்கு இதுவரை எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
ஆனால் இஸ்லாமியர், கிறிஸ்தவர் தாக்கப்பட்டால், உயிரிழந்தால், பணம் கொடுப்பதில் இங்கு போட்டி அரசியல் நடக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். நீட் தேர்வு எந்த காலத்திலும் ரத்து செய்யப்பட மாட்டாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காகவே இதனைப் பற்றி பேசுகிறார். லட்சக்கணக்கான ரூபாய்க்கு மருத்துவக் கல்லூரி சேர்க்கை இடம் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நீட் தேர்வு வந்ததால் தான் ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நடிகர் சூர்யா போன்றோரும் நீட் தேர்வு பற்றி தெரியாமல் பேசுகின்றனர் என்றார். முன்னதாக ஆஞ்சநேயர் கோயில் முன்பாக ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்ற வகையில் இந்து மக்கள் கட்சியினர் முழக்கங்கள் எழுப்பினர்.
Leave your comments here...