தஞ்சை அழகர், திருபுராந்தகர் சிலைகள் மீட்பு- பொன்.மாணிக்கவேல்..!
- October 7, 2019
- jananesan
- : 937
தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் இருந்து ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் மீட்டு கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலையுடன் காணாமல் போன 61 சிலைகளை மீட்கும் நடவடிக்கையில் சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து 69 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படும் தஞ்சை அழகர் மற்றும் திருப்புராந்தகர் சிலைகள், தஞ்சை அரண்மனை கலைக் கூடத்தில் இருப்பதாக இந்தக் குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
Idol Wing
இதையடுத்து, அங்கு ஆய்வு மேற்கொண்ட பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர், 56 கிலோ எடை கொண்ட திருப்புராந்தகர் சிலையையும், 61 கிலோ எடை கொண்ட தஞ்சை அழகர் சிலையையும் மீட்டனர். மீட்கப்பட்ட சிலைகள் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பொன் மாணிக்கவேல், கலைக்கூடத்திற்கும் சிலை திருட்டுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் சிலைகள் கலைக்கூடத்திற்கு கொண்டு வரப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். மீட்கப்பட்ட சிலைகள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் அதற்கு சொந்தமான கோவிலில் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.