960-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை சூரியமின் சக்தியால் இயங்கும் நிலையங்களாக மாற்றியது – இந்திய ரயில்வே
960-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களை சூரியமின் சக்தியால் இயங்கும் நிலையங்களாக மாற்றியது இந்திய ரயில்வே.
ரயில்வேக்குத் தேவையான மின்சாரம் முழுவதையும் தாங்களே உற்பத்தி செய்து கொள்வது என்ற நோக்கத்தை எட்டுவதற்கும், தேசிய சூரியசக்தி மின்சார உற்பத்தி இலக்குகளை எட்டுவதில் பங்களிப்பு செய்வதற்கும், இந்திய ரயில்வே நிர்வாகம் இதுவரையில் 960க்கும் மேற்பட்ட ரயில்நிலையங்களை சூரியசக்தி மின்சார மயமாக்கியுள்ளது. 550 ரயில் நிலையங்களில் 198 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்ய, சூரியசக்தி மின் உற்பத்தித் தகடுகளை மேற்கூரைகளில் பொருத்த ஆர்டர்கள் தரப்பட்டுள்ளன.
முன்னணியில் உள்ள சூரியசக்தி மின் உற்பத்தி நிறுவனங்களுடன் இந்திய ரயில்வே நிர்வாகம் சமீபத்தில் ஒரு கலந்தாய்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 2030ஆம் ஆண்டுக்குள் `கார்பன் உற்பத்தி இல்லாத ரயில்வேயாக’ உருவாதல் என்ற பயணத்தில் அவர்களுடைய பங்களிப்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் பற்றிய கருத்துகள் அப்போது பகிர்ந்து கொள்ளப்பட்டன. 2030 ஆண்டுக்குள் தனக்குத் தேவையான 33 பில்லியன் யூனிட்களுக்கும் மேற்பட்ட மின்சாரத்தை சூரியசக்தி மூலம் உற்பத்தி செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்திய ரயில்வே எடுத்து வருகிறது.
தங்களுக்குச் சொந்தமான காலி இடங்களில் 2030க்குள் 20 கிகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி நிலையங்களை அமைக்கும் மெகா திட்டம் ஒன்றை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது. வாரணாசி, புதுடெல்லி, பழைய டெல்லி, ஜெய்ப்பூர், செகந்திராபாத், கொல்கத்தா, குவாஹாட்டி, ஹைதராபாத், ஹௌரா உள்ளிட்ட ரயில் நிலையங்கள் சூரியமின் சக்தி மயமாக்கப் பட்டுள்ளன.
இந்திய ரயில்வேயிடம் சுமார் 51 ஆயிரம் ஹெக்டர் அளவுக்கு காலி நிலங்கள் உள்ளன. காலியாக உள்ள, ஆக்கிரமிப்பு இல்லாத ரயில்வே நிலங்களில் சூரியமின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க தனியாருக்கு ஆதரவு அளிக்க ரயில்வே நிர்வாகம் தயாராக உள்ளது. 2023 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே முழு அளவில் மின்சார மயமாக்கப்படும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பாதை மின்சாரத் தேவை முழுவதற்கும் சூரியசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் இந்திய ரயில்வே உறுதியாக உள்ளது. முழுமையான `பசுமை வழிப் போக்குவரத்து’ சேவையை அளிக்கும் ரயில்வேயாக உருவெடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. ரயில் நிலையங்களை சூரியசக்தி மின்சார மயமாக்க வேண்டும் மற்றும் ரயில்வேக்கு சொந்தமான காலி இடங்களில் புதுப்பிக்கத்தக்க ஆதார வளங்களின் அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்க வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி சமீபத்தில் அறிவுறுத்தியதன்படி இந்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
`கார்பன் உற்பத்தி இல்லாத ரயில்வே’ என்ற நிலையை அடைவது என்ற லட்சியத்தை நோக்கிய பயணத்தை விரைவுபடுத்துவதாக இது இருக்கும். இதற்காக, தங்களின் காலி நிலங்களில் 2030 ஆம் ஆண்டுக்குள் 20 கிகாவாட் மின் உற்பத்தி நிலையங்களை உருவாக்கும் மெகா திட்டத்தை இந்திய ரயில்வே உருவாக்கியுள்ளது.
இதன் தொடக்கமாக காலியாக உள்ள ரயில்வே நிலங்கள், ரயில் பாதையை ஒட்டிய ரயில்வே நிலங்களில் 3 கிகாவாட் அளவுக்கு சூரியசக்தி மின் உற்பத்தித் திட்டங்களைத் தொடங்குவதற்கு, இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனமான ரயில்வே மின்சார மேலாண்மை நிறுவனம் (REMCL) அழைப்பு விடுத்துள்ளது. குறைந்த கட்டணத்தில் ரயில்வேக்கு மின்சாரத்தை வழங்குவதுடன், ரயில் பாதையை ஒட்டிய இடங்களில் எல்லை அமைத்துக் கொள்வதால் ரயில்வே நிலங்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
Leave your comments here...