கல்வான் பள்ளத்தாக்கு மோதல் : பலியான சீன வீரர்களின் கல்லறை புகைப்படம் வைரலானது.!
கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.
இந்நிலையில், கல்வான் மோதலில் பலியான சீன வீரர்களின் கல்லறை புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தின் உண்மைதன்மை குறித்து சீன தரப்போ, இந்திய தரப்போ உறுதி செய்யவில்லை. சீன மோதலில் தங்கள் தரப்பில் உயிர் பலி இல்லை என சீனா கூறி வந்த நிலையில், சீன சமூக ஊடக தளமான வெய்போவில் கல்லறை புகைப்படங்கள் பகிரப்பட்டன.
அதில் சென் சியாங்ரோ என்ற சீன வீரரின் கல்லறையில், மாண்டரின் மொழியில் எழுதப்பட்டிருப்பதாவது: சென் சியாங்ரோவின் கல்லறை. 69316 துருப்புக்களின் சிப்பாய், பிங்னான், புஜியான் பகுதியில் ஜூன் 2020ல் இந்திய எல்லைப்படையினருக்கு எதிரான போராட்டத்தில் தனது உயிரை தியாகம் செய்தவர். மரணத்துக்கு பின் ராணுவத்தால் நினைவு கூரப்பட்டுள்ளார். இவ்வாறு கல்லறையில் எழுதப்பட்டுள்ளது. உயிரிழந்த வீரரின் வயது 19 எனவும் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த் நிலையில் கல்லறையின் புகைப்படத்தை பகிர்ந்த சீன வீரர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Leave your comments here...