சதுரகிரி மலையடிவாரத்தில் குவிந்த பக்தர்கள் : இ-பாஸ் எளிதாக கிடைத்ததால் வெளி மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திரண்டனர்..!
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி மலைக்கோயில். சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் நாட்களில் மட்டுமே பக்தர்கள் மலைக்கு மேல் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்குவார்கள். இந்தநிலையில் கடந்த நான்கு மாதங்களாக வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக, சதுரகிரி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று முதல் இ.பாஸ் பெறுவதில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்வதற்காக விருதுநகர், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தனர்.
இந்நிலையில் தொற்று பரவல் காரணமாக கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்க வனத்துறையினர் மறுத்துவிட்டனர். இதனால் மலை மீதுள்ள கோவிலுக்குச் செல்லமுடியாத பக்தர்கள் மலைஅடிவாரத்தில் சூடம் ஏற்றி, சுவாமியை வணங்கிச் சென்றார்கள். இது குறித்து மதுரையிலிருந்து வந்திருந்த பக்தர் சிவபாலகிருஷ்ணன் கூறும் போது மாதந்தோறும் இங்கு வந்து சுந்தரமகாலிங்கம் சுவாமியை வணங்கிச் செல்வேன். நான்கு மாதங்களாக இந்தப்பகுதிக்கு வரமுடியாத நிலை இருந்தது. இன்று இ.பாஸ் கிடைத்து இங்கு வந்தும், கூட்டம் அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் யாரையும் மலை மேல் செல்ல அனுமதிக்கவில்லை. அடுத்த மாதம் நிலைமை சரியாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
Leave your comments here...