அரசு அதிகாரி போல் நடித்து கொள்ளை அடித்த பலே கில்லாடிகள் கைது : முத்துசாமி டிஐஜி அதிரடி..!
திண்டுக்கல் அருகேயுள்ள பொன்னகரம் அண்ணாநகரை சேர்ந்தவர் காளஸ்வரன் (வயது 45). இவர் டாஸ்மாக் ஊழியர் ஆவார். இவருடைய மனைவி அருணாதேவி, அந்த பகுதியில் அங்கன்வாடி ஊழியராக வேலை செய்கிறார். இந்த நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி காளஸ்வரன் மட்டும் வீட்டில் இருந்தார். அவருடைய மனைவி வேலைக்கு சென்று விட்டார். அப்போது அவருடைய வீட்டின் முன்பு ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்து டிப்-டாப்பாக இறங்கிய சிலர் ‘திமுதிமுவென’ காளஸ்வரன் வீட்டுக்குள் நுழைந்தனர். திடீரென வீட்டுக்குள் சிலர் நுழைவதை கண்டு காளஸ்வரன் திடுக்கிட்டு விசாரித்தார். அதற்கு அந்த ஆசாமிகள் தங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் போலீசார் என்று கூறினர். மேலும் வீட்டை சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு முழுவதும் சோதனையிட்டனர்.
பின்னர் வீட்டில் இருந்த பீரோவை திறந்து காண்பிக்கும்படி அவர்கள் கூறினர். அதற்கு தன்னிடம் பீரோ சாவி இல்லை என்றும், தனது மனைவியிடம் தான் சாவி இருக்கிறது என்றும் காளஸ்வரன் கூறினார். இதையடுத்து அந்த ஆசாமிகள் காரில் அங்கன்வாடிக்கு சென்று அருணாதேவியை அழைத்து வந்தனர். மேலும் சோதனையிடுவதற்கு வசதியாக பீரோவை திறந்து காட்டும்படி அவரை மிரட்டினர்.சி.பி.ஐ. அதிகாரிகள் என்று கூறியதால் மிரண்டு போன அருணாதேவி பீரோவை திறந்தார். உடனே பீரோவில் இருந்த நகைகள், பணம் மற்றும் நிலத்துக்கான பத்திரங்களை எடுத்து கொண்டு தப்பிவிட்டனர். இதில் சந்தேகம் அடைந்த காளஸ்வரன் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் ரூ.1 லட்சம் மற்றும் 50 பவுன் நகைகள், நில பத்திரங்களை எடுத்து சென்றதாக கூறியிருந்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் சி.பி.ஐ. அதிகாரிகள் போன்று வந்தவர்கள் மோசடி நபர்கள் என்பது தெரியவந்தது.
எனவே, அதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். எனினும், கொள்ளையர்கள் குறித்து எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதற்கிடையே திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டாக ரவளிபிரியா ஆகியோர் சமீபத்தில் பொறுப்பேற்றனர். இதையடுத்து நீண்ட நாட்களாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மணிமாறன் அவர்கள் திண்டுக்கல் ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வினோத் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் அவர்கள் தனிப்படை உதவி ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் அவர்கள் உதவி ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள் தலைமை காவலர் சங்கரநாராயணன், தலைமை காவலர் செந்தில்குமார், தலைமை காவலர் சந்தியாகு, தலைமை காவலர் மருதுபாண்டியன், முதல் நிலை காவலர் அருளானந்தம், முதல் நிலை காவலர் பிரபாகரன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் முதல் நிலை காவலர் ராஜசேகர், காவலர் மணிகண்டன் ஆகியோர் உதவியுடன் மர்ம கும்பலை தேடி வந்தனர்.
இந்நிலையில் அந்த கும்பல் திருப்பூரில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை அடுத்து தனிப்படையினர் விரைந்து சென்று ஒரு பெண் உட்பட ஆறு நபர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ 5 கோடி மதிப்புள்ள சொத்து பத்திரங்கள் 100 பவுன் தங்க நகைகள் ரூபாய் 5 லட்சம் பணம் மொத்தம் ரூ 6.5 கோடி மதிப்புள்ள சொத்து,பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் எம்.எஸ் முத்துச்சாமி அவர்கள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா அவர்கள் பாராட்டினார்கள்.
Leave your comments here...