இந்தி மொழி தொடர்பாக கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டுக்கு அதிகாரி மறுப்பு..!
சென்னை விமானநிலையத்தில் இந்தி மொழி தொடர்பாக நடந்த பிரச்சினை குறித்து கனிமொழி எம்.பி. கூறிய குற்றச்சாட்டை மறுத்த மத்திய தொழில் பாதுகாப்பு படை மூத்த அதிகாரி, மாநில மொழி தெரிந்த அதிகாரிகளை விமானநிலையங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நாடாளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. எம்.பி. கனிமொழி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். அப்போது சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவரிடம் இந்தியில் கூறினார்.
பின்னர் இதுபற்றி கனிமொழி டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், “எனக்கு இந்தி தெரியாததால் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு விமானநிலையத்தில் வைத்து கூறினேன். அதற்கு அவர், நீங்கள் இந்தியர்தானே என்று கேட்டார். இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பது எப்போதில் இருந்து முடிவு செய்யப்பட்டது என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இந்தி திணிப்பு” என்று கூறி இருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் அந்த பெண் அதிகாரிக்கு எதிராக கண்டன குரல்கள் பதிவாயின. இதற்கிடையே, விமான நிலையத்தில் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த மத்திய தொழில் பாதுகாப்பு படை, அதுகுறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
இது குறித்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:- பெண் அதிகாரியிடம் நடத்திய விசாரணையின் போது, அவர், கனிமொழியிடம், நீங்கள் இந்தியரா என்ற கேள்வியை கேட்கவில்லை என்றும், ஹிந்தியும் இந்திய அல்லது அதிகாரப்பூர்வ மொழி தானே என்று தெரிவித்ததாக கூறினார். மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்துக்கு பின், விமான நிலையங்களில், உள்ளூர் மொழி தெரிந்த அதிகாரிகளை, அதிக எண்ணிக்கையில் நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
Leave your comments here...